சினிமா படப்பிடிப்பு பொருட்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்ய பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
கோவில்பட்டியில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கோவில்பட்டி,
சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
வீடு வழங்கும் திட்டம்
கோவில்பட்டியில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் மகத்தான திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அவரது வழியில் செயல்படும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்து உள்ளனர்.
இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிதி உதவி, தற்போது ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கோவில்பட்டி தொகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்ட 521 வீடுகள் அடுத்த வாரம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வில் 38 உறுப்பினர்கள் வென்றாலும், அவர்களில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை. பின்னர் அ.தி.மு.க.தான் மாநிலங்களவை உறுப்பினராக இஸ்லாமியரை நியமித்தது. ஆனால், தற்போது ஓட்டுக்காக தி.மு.க. இஸ்லாமியருக்கு ஆதரவாக இருப்பது போன்று நடிக்கிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பதற்கு தே.மு.தி.க.வுக்கு உரிமை உள்ளது. எனினும் இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள்.
அரசு தெளிவான நிலைப்பாடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு எடுத்து, தீர்மானம் நிறைவேற்றி, அந்த ஆலையின் மின்சாரம், குடிநீர் இணைப்புகளை துண்டித்து, ஆலைக்கு சீல் வைத்துள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு தெளிவாக உள்ளது.
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைப்பது குறித்து, பொதுமக்களின் கருத்துகளை தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கலெக்டர்கள் கேட்டறிந்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்.
படப்பிடிப்பில் விபத்து
தமிழகத்தில் சினிமா துறையில் பெப்சி போன்ற திரைப்பட தொழிலாளர் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, படப்பிடிப்பு குழுவினருக்கு அரசு போதிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. எனினும் சில சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், அரசிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், தாங்களாகவே படப்பிடிப்புகளை நடத்துகின்றனர். இதனால்தான் படப்பிடிப்புகளில் நிகழும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் சினிமா படப்பிடிப்புகளில் விபத்துகள் நிகழாத வகையிலும், படப்பிடிப்பின்போது விபத்துகள் நிகழ்ந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும், என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்.
மேலும் சினிமாத்துறையினர் படப்பிடிப்பு தளங்களில் காட்சிகளை படமாக்குவதற்காக மட்டும்தான் அரசிடம் அனுமதி பெறுகின்றனர். எனவே, படப்பிடிப்பு தளங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், அங்கு பயன்படுத்தப்படும் கிரேன் உள்ளிட்ட பொருட்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.