தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19–வது விசாரணை நிறைவு 459 சாட்சிகளிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19–வது விசாரணை நேற்று நிறைவு பெற்றது.

Update: 2020-02-28 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19–வது விசாரணை நேற்று நிறைவு பெற்றது. இதில் மொத்தம் 459 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

ஒருநபர் ஆணையம் 

தூத்துக்குடியில் கடந்த 2018–ம் ஆண்டு மே மாதம் 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி 19–ம் கட்ட விசாரணை நடந்த 24–ந்தேதி தொடங்கியது. இந்த விசாரணை நேற்று நிறைவு பெற்றது. இதில் 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 15 பேர் மட்டும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து ஒருநபர் ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;–

459 சாட்சிகள் 

இதுவரை 459 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 634 ஆவணங்கள் பெறப்பட்டு குறியீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்கான விசாரணை வருகிற 17–ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இதுவரை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும். 

நடிகர் ரஜினிகாந்த் எந்த தேதியில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்புவது தொடர்பாக ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அவருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்