கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; அரசு கொறடா தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார்.
அரியலூர்,
அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 1,64,362 பசுவினம் மற்றும் 1,799 எருமையினம் உள்ளிட்ட 1,66,161 கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து காத்திடும் பொருட்டு, கால் மற்றும் வாய்நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 1-வது சுற்று தடுப்பூசிபோடும் பணி தொடர்ந்து 20 நாட்களுக்கு தொடர்ச்சியாக அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது.
மேற்படி தடுப்பூசி பணிக்காக கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய 39 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு, தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் பாதுகாக்கவும் என்றார்.
இதில் தாமரைக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஹமீதுஅலி, துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ், உதவி கால்நடை இயக்குனர் செல்வராஜ், கால்நடை மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.