பிவண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒவைசி எம்.பி. பேச இருந்த பொதுக்கூட்டம் திடீர் ரத்து
பிவண்டியில்குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஒவைசி எம்.பி. பேச இருந்த பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.;
மும்பை,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தானே மாவட்டம் பிவண்டி தோபி தலாவ் பகுதியில் உள்ள பரசுராம் தாவரே மைதானத்தில் எம்.ஐ.எம். கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
பொதுக்கூட்டம் ரத்து
இதில் அந்த கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேச இருந்தார். இந்த நிலையில், திடீரென அந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. டெல்லி வன்முறையால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பிவண்டி போலீசார் எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முன்வரவில்லை. கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி அந்த கட்சிக்கு கடிதம் அனுப்பினர். இதை எம்.ஐ.எம். கட்சி ஏற்றுக் கொண்டு நேற்று நடக்க இருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்தது.
இந்த பொதுக்கூட்டம் மார்ச் 2-வது வாரத்தில் நடைபெறும் என அக்கட்சியின் அவுரங்காபாத் தொகுதி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.