நாமக்கல் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்' நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று ‘சீல்' வைத்தனர்.

Update: 2020-02-28 00:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் 235 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இவற்றில் 9 கடைக்காரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வாடகை பாக்கியை செலுத்த கோரி நோட்டீசு மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இருப்பினும் 9 கடைக்காரர்களும் சுமார் ரூ.12 லட்சம் வாடகை தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் ஐஹாங்கீர் பா‌ஷா உத்தரவின் பேரில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 கடைகளுக்கு ‘சீல்’

அதிகாரிகள் ‘சீல்' வைப்பதை அறிந்த 5 கடைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை உடனடியாக நகராட்சியில் செலுத்தினர். இதையடுத்து வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.

இதேபோல் பஸ்நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை அதிகாரிகள் அகற்றினர். இதில் சுகாதார அலுவலர் சுகவனம், வருவாய் ஆய்வாளர் பழனிசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்