கலசம் இல்லாமல் காட்சியளிக்கும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில்

கலசம் இல்லாமல் காட்சியளிக்கும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-02-27 22:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலின் உபகோவிலான தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ளது கோதண்டராமர் திருக்கோவில். இந்த கோவிலில், இலங்கையில் ராவணனை வதம் செய்த பின்பு ராமனிடம் சரணாகதி அடைந்த ராவணன் தம்பி விபீஷ்ணரை மீண்டும் இலங்கை மன்னராக ராமபிரான், சீதாதேவி ஆகியோர் முன்னிலையில் லட்சுமணர் பட்டாபிஷேகம் செய்து வைத்த இடமாகும்.

இந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் கோவிலில், பட்டாபிஷேக சிலைகள் உள்ளன. இதையொட்டி ஆண்டு தோறும் கோவிலில் மே அல்லது ஜூன் மாதங்களில் பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் கோதண்டராமர் கோவிலில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோவிலின் விமானத்தில் உள்ள கலசம் திருடு போனது. இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை திருடு போன கலசம் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுவாக ஒரு கோவிலிலின் கோபுரம் மற்றும் விமானத்தின் மேல் பகுதியில் உள்ள கலசங்கள் சேதமானாலோ அல்லது திருடு போனாலோ அந்த கோவிலில் உடனடியாக புதிதாக கலசம் வைத்து கும்பாபிஷேகம் செய்து பூஜை நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

ஆனால் கோதண்டராமர் கோவில் விமானத்தின் கலசம் திருடு போய் 2 மாதமாகியும், கலசம் இல்லாமல் காட்சியளிக்கிறது. இது ஆகம விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே கோதண்டராமர் கோவிலின் விமானத்தில் புதிதாக கலசம் வைத்து கும்பாபிஷேகம் செய்யவும், கோவிலை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றவும் இந்துஅறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்