கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் கடிதம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற 1983-ம் ஆண்டு செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வழங்க வேண்டும். அதன்படி செப்டம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் வரத்து குறைந்தது
சராசரியாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்தநிலையில் ஆந்திர விவசாயிகள் தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
நேற்று 6 மணி வரை 267 கன அடியாக வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1616 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
ஆந்திர அரசுக்கு கடிதம்
இந்தநிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்.
கடந்த மாதம் திருப்பதியில் நடைபெற்ற கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.