வண்ணாரப்பேட்டையில் 14-வது நாளாக போராட்டம்: முஸ்லிம் பெண்கள் நோன்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் 14-வது நாளாக நேற்றும் முஸ்லிம்களின் போராட்டம் நடந்தது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி முஸ்லிம் பெண்கள் நோன்பு இருந்தனர்.

Update: 2020-02-27 23:00 GMT
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ‘சென்னை ஷாகீன்பாக்’ எனும் பெயரில் கடந்த 14-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் 14-வது நாளாக நேற்றும் முஸ்லிம்கள் போராட்டம் தொடர்ந்தது. இதில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெறக்கோரி போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து முஸ்லிம் பெண்களும் நோன்பு இருந்தனர்.

பெண்கள் நோன்பு

அதிகாலை 4.30 மணி முதல் 14 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல், உணவு சாப்பிடாமல் அவர்கள் நோன்பு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு நோன்பு திறந்து, அவர்கள் நோன்பு கஞ்சி மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டனர். அதனைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முஸ்லிம் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர், கடந்த 22-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

மேலும் செய்திகள்