அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் 3 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள்

தஞ்சை அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் 3 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-02-27 23:00 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை-நாகை சாலையில் கோவிலூர் அருகே குமிழக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் சில நாட்களுக்கு முன்பு அதற்கான அலுவலக கொட்டகை மற்றும் நெல் சுத்தப்படுத்தும் எந்திரம் வைக்கப்பட்டது. இதனை நம்பி குமிழக்குடி, கோனூர், நெல்லித்தோப்பு, நெட்டாநல்லூர், மாடி கிராமம், எடவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய கொண்டுவந்து வைத்துள்ளனர். மழையில் இருந்து காப்பாற்ற நெல் மூட்டைகளை தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

3 ஆயிரம் நெல் மூட்டைகள்

இந்த நிலையில் 25 நாட்களுக்கு மேலாகியும் குமிழக்குடி கிராமத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் கவலை அடைந்த ஒரு சில விவசாயிகள் தங்களின் நெல்லை வேறு பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர். மீதமுள்ள விவசாயிகள் 3 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் இரவு, பகலாக அங்கேயே காத்துக்கிடக்கின்றனர்.

எனவே குமிழக்குடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்