சைதாப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி வாலிபர் கைது
சைதாப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலியானார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 60). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மோட்டார் ஓட்டிவந்த மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நிஷாந்தன்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.