விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஊருக்குள் புகுந்து கோழியை துரத்தும் சிறுத்தை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பரபரப்பு

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஊருக்குள் புகுந்து கோழியை சிறுத்தை துரத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-27 22:30 GMT
விக்கிரமசிங்கபுரம், 

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஊருக்குள் புகுந்து கோழியை சிறுத்தை துரத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வனவிலங்குகள் அட்டகாசம் 

களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில், அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் என 4 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.

கோழியை துரத்தும் சிறுத்தை 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அனவன்குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் தென்னை தோப்புக்குள் புகுந்து மரங்களை பிடுங்கி நாசம் செய்தன. விக்கிரமசிங்கபுரம் திருப்பதியாபுரம் இந்திராநகர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரது வீட்டு தொழுவத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் குதறியது. மேலும் அவரது நாயையும் கடித்து தூக்கி சென்றது.

இந்த நிலையில் அதே பகுதியில் கோழி ஒன்றை சிறுத்தை துரத்தி செல்லும் காட்சி சுடலையாண்டி என்பவரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கோடை காலம் தொடங்கி விட்டாலே, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதனால் விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும் முடியவில்லை. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு கூட எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்