கன்னியாகுமரி தங்கப்புதையல் விவகாரம்: பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு அபராதம் மனித உரிமைகள் ஆணையம் அதிரடி
பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
நெல்லை,
கன்னியாகுமரி தங்கப்புதையல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
மனித உரிமை ஆணையம் விசாரணை
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த புகார் மனுக்கள் தொடர்பான விசாரணை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது. மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை மேற்கொண்டார்.
தங்கப்புதையல் விவகாரம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் குட்டிசரன்விளையை சேர்ந்தவர் ஜெர்வின் (வயது 24), பொக்லைன் எந்திர டிரைவர். திடீரென்று அவரிடம் பணப்புழக்கம் அதிகமானது. சொகுசு கார்கள், பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வாங்கி தொழில் செய்ய தொடங்கினார்.
இதனால் ஜெர்வினுக்கு தங்கப்புதையல் கிடைத்துள்ளது எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் அவரை கடத்தி சென்றது. அந்த புதையல் எங்கே? என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஜெர்வின் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு
இந்த வழக்கு தொடர்பாக சுரேஷ்குமார், கிருஷ்ணகுமார், ஜெரின்ராபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கருங்கல் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, அவருடன் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. அதன் அடிப்படையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சப்–இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். டிரைவர் ஜெர்வின் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் அந்த 3 போலீசாருக்கும் நோட்டீசு அனுப்பியது.
அபராதம்
அதன் அடிப்படையில் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின், டிரைவர் ஜெர்வின் ஆகியோர் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு நேற்று ஆஜராகினர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த முறை நடந்த விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. விசாரணைக்கு ஆஜராகாததற்கு சரியான காரணம் குறித்து மனு தாக்கல் செய்யாததால் அவர்கள் 3 பேருக்கு நீதிபதி ஜெயசந்திரன் ரூ.500 அபராதம் விதித்தார். அதை 3 பேரும் சேர்ந்து செலுத்தினார்கள்.
வழக்கில் போலீஸ் அதிகாரியை சேர்க்க வேண்டும்
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர சேதுபதி. இவர், 23–10–2019 அன்று தனது காரில் பணி நிமிர்த்தம் காரணமாக வன்னிக்கோனேந்தலில் இருந்து கழுகுமலை சென்று கொண்டு இருந்தார். பனவடலிசத்திரம் அருகே பாஸ்கர சேதுபதி காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வக்கீல் பாஸ்கர சேதுபதியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டார்.
இதுகுறித்து அவர், மனித உரிமைகள் மீறப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாஸ்கர சேதுபதி சார்பில் வக்கீல்கள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், “வக்கீல் பாஸ்கர சேதுபதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். இந்த மனித உரிமை மீறல் வழக்கில் சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரத்தையும் சேர்க்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
48 மனுக்கள்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன், மனித உரிமை ஆணையத்திடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “வரலாற்று சிறப்புமிக்க மானுர் பெரியகுளம், பள்ளமடை குளம் தூர்வாரப்பட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து துறைவாரியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நேற்று மட்டும் 48 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனால் மனித உரிமைகள் ஆணையம் முன்பு வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் வருகிற மே மாதம் 5–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.