சாரண –சாரணியர் ஊர்வலம் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூரில் சாரண –சாரணியர் ஊர்வலத்தை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-27 22:30 GMT
திருப்பத்தூர், 

சாரண–சாரணியர் இயக்கம் சார்பில் பேடன் பவல் பிறந்தநாளை முன்னிட்டு, சிந்தனை நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பில், சிந்தனை நாள் ஊர்வலம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். சாரண–சாரணியர் மாவட்ட அமைப்பாளர் பி.சுரேஷ்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்து கொண்டு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி ஆய்வாளர் தாமோதரன், மாவட்ட சாரணர் ஆணையர் ஆஜாம், மாவட்ட சாரண–சாரணிய இயக்க செயலாளர் ஆர்.முருகன் ஆகியோர் பேசினார்கள்.

ஊர்வலம் கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக சென்று தூய நெஞ்சக் கல்லூரி அடைந்து மீண்டும் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலைவிதிகளை மதிப்போம், செல்போன்களை பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முடிவில் சாரணர் பயிற்சி ஆணையர் ஆர்.ஷீலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்