வருகிற 1-ந் தேதி முதல் டெல்லி-மதுரை இடையே தினசரி விமான சேவை - வெங்கடேசன் எம்.பி. தகவல்
வருகிற 1-ந்தேதி முதல் டெல்லி-மதுரை இடையே தினசரி விமான சேவை தொடங்கப்படும் என்று வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.;
மதுரை,
மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த 25-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர், இணை தலைவரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன், சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் தொடர்பாக வெங்கடேசன் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டுத் தொகை 916 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல் மற்றும் நில உடைமையாளர்களுக்கு பணம் வழங்கும் பணியை மதுரை மாவட்ட நிர்வாகம் தொய்வின்றி செய்து வருகிறது.
பன்னாட்டு விமான சேவை தொடர்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை மதுரைக்கு அழைத்து விவாதித்து பணிகளை துரிதப்படுத்தி, அதன் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். எம்.பி.க்கள் எடுத்த முயற்சியின் காரணமாக வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் டெல்லி-மதுரை இடையே தினந்தோறும் விமானம் இயக்கப்படும். டெல்லி-மதுரை- திருச்சி-அபுதாபி இடையே விமான சேவையை தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக பெரியார் பஸ் நிலையத்திலிருந்து குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்பட வில்லை. மதுரையோடு சேர்ந்து தொடங்கப்பட்ட ஜம்முவில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது.
ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. இதற்கு தனிக்கட்டிடமும், 300 பேர் சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஒரு மருத்துவமனையும் தேவை. இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றை பயன்படுத்தலாம்.
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என்று தனி அதிகாரி நியமிக்கப்படவில்லை. முதலில் மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க முதல்-அமைச்சர், மதுரை மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.