சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது.;

Update: 2020-02-26 23:41 GMT
புதுச்சேரி,

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களின் இறைவனான ஏசு, ெஜருசலேமில் பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார் என்று அவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. மக்களுக்கு போதனை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர் 40 நாட்கள் தனிமையில் சென்று உபவாசம் இருந்தார். இதனை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருந்து வருகின்றனர்.

பின்னர் இயேசு அந்த நாட்டு அரசினால் பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அதற்கு முன்பு ஏசுவை சிலுவையை சுமந்தபடி வழிநெடுக நடக்கச் செய்து, கொல்கதா மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சிலுவையோடு சேர்த்து ஆணியால் அடித்து தொங்கவிட்டனர். 3 மணி நேரம் சிலுவையில் தொங்கியபோது 7 திருவசனங்களை பேசி உயிரை விட்டார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.

தவக்காலம்

இந்த சம்பவங்களையெல்லாம் நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உயிர்ப்பு பெருவிழாவிற்கு முந்தைய 40 நாட்களை லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். அந்த நாட்களில் உபவாசம் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர்.

இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் தான் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சாம்பல் புதன் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை இருதய ஆண்டவர் பசிலிக்கா, ஜென்மராக்கினி ஆலயம், வில்லியனூர் மாதா கோவில், காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி சகாயமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. திருப்பலியில் பாதிரியார்கள் ஒவ்வொருவரின் நெற்றியிலும் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இதில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். குருத்தோலை தினத்தன்று பயன்படுத்தப்படும் ஓலைகளை எரிப்பதன் மூலம் கிடைக்கும் சாம்பல் பாதிரியாரால் மந்திரிக்கப்பட்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசப்படுகிறது.

சிலுவைப்பாதை நிகழ்ச்சி

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் தேவாலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 11-ந் தேதி நள்ளிரவு கொண்டாடப்பட உள்ளது. இதனை கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அதன் பின்னர் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நிறைவு பெறும்.

மேலும் செய்திகள்