நகைக்கடையில் பர்தா அணிந்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் ஊழியர் கைது பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
பிரபாதேவியில் உள்ள நகைக்கடையில் பெண் போல பர்தா அணிந்து வந்து, நகைகளை கொள்ளை அடிக்க முயன்ற முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.;
மும்பை,
மும்பை பிரபாதேவி பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வாடிக்கையாளர் போல ஒருவர் வந்தார். அப்போது, கடையில் ஊழியர் மற்றும் கவுரிசங்கரின் உறவினர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது, அந்த வாடிக்கையாளர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை தேர்வு செய்தார். பின்னர் கடை ஊழியரிடம் இந்த நகைகளை வாங்க தனது மனைவி வரவுள்ளதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரத்தை முன்பணமாக வைத்து கொள்ளும்படி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் பெண்கள் போல பர்தா அணிந்தபடி 2 பேர் கடைக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் தனது கணவர் தேர்வு செய்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொடுக்கும்படி கூறினார். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை ஊழியர் வந்திருப்பது கொள்ளையர்கள் என அறிந்து நகைகளை கொடுக்கமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நகைகள் அடங்கிய பார்சலை தரும்படி மிரட்டினான்.
ஊழியர் சிக்கினார்
இதில், உஷாரான ஊழியர் துரிதமாக செயல்பட்டு, கொள்ளையன் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கினார். அப்போது, உடன் இருந்த மற்றொரு கொள்ளையன் கடை ஊழியரை கீழே தள்ளினான். பின்னர் கொள்ளையர்கள் இருவரும் நகைக்கடையில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனால் நகைக்கடை ஊழியர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டபடி அவர்களை விரட்டினார். இதை சாலையில் சென்றவர்கள் பார்த்து, பர்தா அணிந்தபடி தப்பிஓடிய கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கொள்ளையன் நகைக்கடையில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் மங்கள்சிங்(வயது40) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய அவரது கூட்டாளியை வலைவீசி தேடிவருகின்றனர்.