எளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற நடவடிக்கை மத்திய மந்திரி முரளீதரன் பேச்சு

எளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக மத்திய மந்திரி முரளீதரன் கூறினார்.

Update: 2020-02-26 23:07 GMT
பெங்களூரு,

வெளியுறவுத்துறை மற்றும் கர்நாடக அரசு சார்பில் வெளிநாட்டு தொடர்பு குறித்த கருத்தரங்கு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மத்திய அரசு பாஸ்போர்ட், விசா பெறும் வசதிகளை எளிமைபடுத்தி உள்ளது. 117 நாடுகளில் விசா சேவை வசதிகள் கிடைக்கின்றன. இ-பாஸ்போர்ட் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் இப்போது முன்பை விட அதிக பாதுகாப்பு நிறைந்ததாக உள்ளது. சட்டத்துறை மந்திரி மாதுசாமி சில விஷயங்கள் குறித்து பேசினார். இதை மத்திய அரசு பரிசீலிக்கும்.

தொழில்நுட்ப என்ஜினீயர்கள்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் அடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவர்களுக்கு இந்த வெளிநாட்டு தொடர்பு கருத்தரங்கு உதவியாக இருக்கும். இத்தகைய கருத்தரங்குகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் 3 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இதில் கர்நாடகத்தினர் அதிகம். இத்தகைய கருத்தரங்குகள் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பயன் பெறட்டும். கர்நாடகத்தை சேர்ந்த தொழில்நுட்ப என்ஜினீயர்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.

இவ்வாறு முரளீதரன் பேசினார்.

மந்திரி மாதுசாமி பேச்சு

இதில் கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேசியதாவது:-

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்பவர்கள் விசா பெற சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் அமெரிக்கா விசா பெற பெங்களூருவில் அதற்கான அலுவலகத்தை திறந்தால் நன்றாக இருக்கும். இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். கர்நாடகத்தில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு பாஸ்போர்ட் பெற ஒரு மாதம் தேவைப்பட்டது.

தற்போது 12 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விடுகின்றன. போலீஸ் ஆய்வு பணியும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வசதிக்காக பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதை எளிமையாக்க வேண்டும். வெளிநாடுகளில் இந்தியர்கள் மரணம் அடைந்தால், உடலை கொண்டு வரும் நடைமுறைகளும் கடினமாக உள்ளன. இந்த விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாதுசாமி பேசினார்.

இந்த கருத்தரங்கில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் விஜய மகாந்தேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்