பஸ் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் கட்சியின் செயல் தலைவர் பேட்டி
கர்நாடகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மிகப்பெரிய பின்னடைவு
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சமையல் கியாஸ் விலை அதிகளவில் உயர்ந்துவிட்டது. பெட்ரோல்-டீசல் விலையும் அதிகரித்து உள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. நிதி ஆதாரங்களை திரட்டுவதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. கர்நாடக அரசும் திவாலாகும் நிலையில் இருக்கிறது. இத்தகைய மோசமான சூழ்நிலையில் அரசு பஸ் கட்டண உயர்வு பொதுமக்களை கஷ்டத்தில் சிக்க வைத்துள்ளது.
தீவிரமாக போராட்டம்
இந்த பஸ் கட்டண உயர்வை கண்டித்து சட்டசபைக்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் காங்கிரஸ் தீவிரமாக போராட்டம் நடத்தும். சுதந்திர போராட்ட தியாகி துரைசாமியை மிக தரக்குறைவாக பேசியுள்ள பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னாள் எம்.எல்.ஏ. மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரது கருத்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை அவமதித்துள்ளது. தேசபக்தி பற்றி பேசும் பா.ஜனதா தலைவர்கள் துரைசாமி போன்ற மூத்தவர்களை அவமதிப்பதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.
இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்