கிராம மக்களின் கவனத்தை திசை திருப்பி, கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீச்சு - கொத்தனார் கைது

கிராம மக்களின் கவனத்தை திசை திருப்பி, கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-27 22:45 GMT
பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 49). இவருக்கு சொந்தமான மாங்காய் குடோன், அய்யம்பாளையம்-தாண்டிக்குடி சாலையில் அழகர்பொட்டல் என்ற இடத்தில் உள்ளது. கடந்த 23-ந்தேதியன்று நள்ளிரவில் இந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து வத்தலக் குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் ரத்தினகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அய்யம்பாளையம் அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (24). கொத்தனார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனையடுத்து தனது கள்ளக்காதலியை இரவில் சந்திக்க ராஜாங்கம் திட்டமிட்டார். ஆனால் கள்ளக்காதலி வசிக் கிற தெருவில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது.

இதனால் அவர்களின் கவனத்தை திசை திருப்பி, கள்ளக்காதலியை சந்திக்க அவரது வீட்டுக்கு செல்ல ராஜாங்கம் நூதனமுறையை கையாண்டார். அதாவது அப்பகுதியில் தீப்பிடித்து எரிவதை கண்டால் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்துக்கு சென்று விடுவார்கள். தான் தனது கள்ளக்காதலியுடன் வீட்டில் தனிமையில் இருக்கலாம் என்று கருதினார்.

இதற்காக, அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ராஜாங்கம் பாட்டிலுடன் சென்றார். அங்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கினார். பின்னர் அதனை பெட்ரோல் குண்டாக பயன்படுத்தி, கூரையால் வேயப்பட்டிருந்த ரத்தினகுமாரின் மாங்காய் குடோனில் வீசினார். சிறிதுநேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனைக்கண்ட அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, தீயை அணைப்பதற்காக குடோன் அருகே சென்று விட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்திய ராஜாங்கம், யாருடைய கண்களிலும் படாமல் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று இரவில் தங்கி விட்டு சென்றிருக்கிறார்.

இந்த வழக்கில் குடோன் அருகே கிடந்த பாட்டில் துருப்புச்சீட்டாக இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். அதில் பாட்டிலுடன் ராஜாங் கத்தின் உருவம் பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் குடோனில் பெட்ரோல் குண்டு வீசி தீப்பற்ற வைத்தது என்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதனையடுத்து ராஜாங் கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். கள்ளக்காதலியை சந்திப்பதற்காக குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்