நெய்வேலியில் பரபரப்பு: ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
நெய்வேலியில் ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி 5-வது வட்டத்தில் உள்ள பெரியார் சாலை என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன்(வயது 61). இவர் என்.எல்.சி. சுரங்கம் 1-ல் வேலை செய்து ஓய்வுபெற்ற தொழிலாளி ஆவார். இந்த நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராஜேந்திரன் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ராஜேந்திரன் வீட்டில், மர்ம மனிதர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். அவை இரண்டும் முன்பகுதியில் உள்ள கார் ஷெட்டின் உள்ளே விழுந்தன. அதில் ஒரு குண்டு மட்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் இதை பார்த்து, அதிர்ச்சியடைந்து, உடனடியாக என்.எல்.சி. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதில் கார் ஷெட் மற்றும் காரின் பின் பகுதி மட்டும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீட்டை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், ராஜேந்திரனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, ராஜேந்திரன் உடனடியாக நெய்வேலிக்கு விரைந்தார்.
இதுபற்றி அறிந்த டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு வீசப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகளில் வெடிக்காமல் கிடந்த ஒரு குண்டை கைப்பற்றினர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் வருமாறு:-
ராஜேந்திரன் குடியிருந்து வரும் வீட்டின் மேல் மாடியில் என்.எல்.சி.யில் பழகுநர் பயிற்சியில் உள்ள 4 வாலிபர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அடிக்கடி குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை ராஜேந்திரன் கண்டித்துள்ளார். அவ்வாறு இருந்தும், அவர்கள் தங்களது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து என்.எல்.சி. நகர நிர்வாக அலுவலத்தில் இது தொடர்பாக ராஜேந்திரன் புகார் செய்துள்ளார்.
இதற்கிடையே, சந்தேகத்தின் அடிப்படையில், ராஜேந்திரன் வீட்டின் மேல் மாடியில் 4 வாலிபர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பாட்டில்கள் மற்றும் குறைந்த அளவில் பெட்ரோல், திரிக்கு பயன்படுத்திய துணி ஆகியவை கிடந்தன. அங்கிருந்த 3 வாலிபர்களை போலீசார் டவுன்ஷிப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.