பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி கஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை துணை கமிஷனர் உத்தரவு
பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலழகியை பேசின்பிரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திரு.வி.க. நகர்,
சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் 9-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேலழகி(வயது 57). பிரபல கஞ்சா வியாபாரியான, இவர் கஞ்சா விற்ற வழக்கில் பலமுறை சிறை சென்று வந்துள்ளார்.
இவர், கடந்த மாதம் 20-ந் தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மற்றும் பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி அடுத்த 6 மாதத்துக்கு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் 25 நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலழகியை பேசின்பிரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரமாண பத்திர உறுதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட வேலழகியை அடுத்த 142 நாட்கள் ஜாமீனில் வர முடியாத வகையில் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
அதேபோல் பிரமாண பத்திர உறுதி மொழியை மீறிய புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த சசிகுமார்(21) என்பவரை 333 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டார்.