தொடர் உறைபனியால் புல்வெளிகள், மரங்கள் காய்ந்தன; காட்டுத்தீ ஏற்படும் அபாயம்

தொடர் உறைபனியால் புல்வெளிகள், மரங்கள் காய்ந்து காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-02-26 22:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடித்ததால் உறைபனி பொழிவு காலதாமதமாக தொடங்கியது. ஊட்டியில் பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. ஊட்டி காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், சூட்டிங்மட்டம் சுற்றுலா தலம் உள்ளிட்ட இடங்களில் புல்வெளிகள் காய்ந்து கருகி விட்டன.

இதனால் பச்சை, பசேல் என காட்சி அளித்த புல்வெளிகள் பசுமையை இழந்தது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரத்தில் புற்கள் மீது வெண்மை நிறத்தில் உறைபனி படர்ந்து இருக்கிறது. வனப்பகுதிகளில் புல்வெளிகள் கருகி, மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வறட்சியான நிலையில் உள்ளது. ஊட்டி எச்.பி.எப். பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கற்பூர மரங்கள் காய்ந்து உள்ளன.

அதேபோல் ஊட்டி தொட்டபெட்டா, தலைகுந்தா, பார்சன்ஸ்வேலி, கவர்னர்சோலை உள்ளிட்ட வனப்பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளது. அதன் காரணமாக காட்டெருமை, கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. தொடர் உறைபனியால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்பட யாரேனும் வனப்பகுதிகளில் வைத்து சமையல் செய்யக்கூடாது, சமையல் கியாஸ் சிலிண்டர் எடுத்து வரக்கூடாது, புகை பிடித்தல் கூடாது, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு வேண்டுமென்றே வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா செயல்பட்டு வருகிறது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் டிரெக்கிங்(நடைபயணம்) செல்ல அனுமதி இல்லை என்று தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்