ஆனைமலை அருகே, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆனைமலை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஆனைமலை,
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த மாரப்பகவுண்டன் புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அலுவலர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கம்ப்யூட்டர் ஆபரேட்டரான பார்த்திபன் என்பவர் முதலில் வங்கிக்கு வந்துள்ளார். வங்கியின் ஒரு பக்க ஜன்னலில் துளையிடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வங்கிக்குள் சென்று பார்த்தபோது லாக்கரை உடைக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. உடனே அவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் அங்கு வந்த வங்கியின் செயலர் (பொறுப்பு) ஷர்மிளா பானு இச்சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மர்ம ஆசாமிகள் வங்கியின் ஒரு ஜன்னலில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு கியாஸ் கட்டிங் மூலம் துளையிட்டுள்ளனர். அதற்குள் புகுந்த மர்ம நபர்கள் நீண்ட நேரம் போராடி உள்ளே இருந்த இரும்பு லாக்கரை கியாஸ் கட்டிங் மூலம் வெட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் இரும்பு பெட்டியை திறக்க முடியவில்லை. ஏதோ காரணத்தால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடிவிட்டனர்.கூட்டுறவு வங்கிக்குள் அபாய ஒலிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது சம்பவத்தன்று செயல்படவில்லை. வங்கியின் லாக்கருக்குள் ரொக்கம் பணம் ரூ. 7 லட்சமும், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த சுமார் 180 பவுன் தங்க நகைகள் 75 பைகளிலும் உள்ளே இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவை கொள்ளையர்களின் கைகளில் சிக்கவில்லை. பணம், நகைகள் தப்பியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேட்டைக்காரன்புதூர் பிரதான ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியிலும் இதேபோன்று கொள்ளை முயற்சி நடந்தது. அங்கு ஜன்னலை துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும்போது மர்ம நபர்கள் தங்களை அடையாளம் கண்டு பிடிக்காமல் இருக்க உரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்தை வங்கி வளாகம் முழுவதும் தூவிச் சென்றனர்.
அதேபோன்று இந்த வங்கியிலும் குருணை மருந்தை பல இடங்களில் தூவி விட்டுச் சென்றுள்ளனர். ஆகவே இரு கொள்ளை சம்பவங்களிலும் குறிப்பிட்ட நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகி றோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.