வேலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
வேலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார். இந்த பட்டியல் குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் வார்டு மறுவரையறை செய்யப்படாததால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரைவு வாக்குச்சாவடி பட்டியலும் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டார்.
இந்்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் படி வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, குடியாத்தம். காட்பாடி ஒன்றியங்களில் 89 வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மட்டும் 127 வாக்குச்சாவடி மையங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம் வருமாறு:-
அணைக்கட்டு ஒன்றியத்தில் 197 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது 50 மையங்கள் அதிகரிக்கப்பட்டு 247 மையங்கள் உள்ளன. குடியாத்தம் ஒன்றியத்தில் 254 மையங்கள் இருந்தன. தற்போது 26 மையங்கள் அதிகரிக்கப்பட்டு 280 வாக்குச்சாவடி மையங்களாகவும், காட்பாடி ஒன்றியத்தில் இருந்த 122 மையங்களுடன் தற்போது கூடுதலாக 13 வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டு 135 மையங்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ஏற்கனவே 253 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது இங்கு 127 மையங்கள் குறைக்கப்பட்டு 126 வாக்குச்சாவடி மையங்கள் மட்டுமே உள்ளது. கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 209, கணியம்பாடி ஒன்றியத்தில் 119, வேலூர் ஒன்றியத்தில் 97 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 1,213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
வேலூர் மாநகராட்சியில் 373-ஆக இருந்த வாக்குச்சாவடி மையங்கள் தற்போது 377 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் வாக்குச்சாவடி மையங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. நகராட்சிகளை பொறுத்தவரையில் பேரணாம்பட்டு நகராட்சியில் 3 வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 42 மையங்கள் உள்ளன.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தேசிய தகவல் மையம் மூலம் மாவட்ட வலைதளத்தில் (https://vellore.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்மீது கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் வருகிற 2-ந் தேதி நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம். மனுவாகவும் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.