நாசரேத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிய கல்லூரி மாணவர் கைது சக மாணவரிடம் கைவரிசை காட்டியவர்
நாசரேத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 19 வயது கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்,
நாசரேத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 19 வயது கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவர் படித்த கல்லூரியிலேயே சக மாணவரின் மோட்டார் சைக்கிளை திருடி விற்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரி முன்பு மாணவர் நிறுத்தி இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் கடந்த 17–ந்தேதி திருடு போனது.
பின்னர் கடந்த 24–ந்தேதி நாசரேத் ஐசக் தெருவைச் சேர்ந்த சுடலை (53), நாசரேத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனது எலக்ட்ரிகல் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர் திருடிச் சென்றார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோட்டார் சைக்கிள்களை திருடிய நபரை பிடிப்பதற்காக, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சூரியன், அனந்த முத்துராமன், தங்கேசுவரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மாணவர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடந்த நாட்களில், நாசரேத் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் தூத்துக்குடியை சேர்ந்த 19 வயது மாணவரே, சக மாணவரின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று வெளியூரில் விற்றதும், அந்த மாணவரே சுடலையின் மோட்டார் சைக்கிளையும் திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த சுடலையின் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். மேலும் சக மாணவரிடம் திருடி விற்ற விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும் மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். நாசரேத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிய மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.