நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

வள்ளுவம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2020-02-26 22:30 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், ‘‘ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் பண்ணை பகுதியில் நீர்வளம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. நவ்லாக் பண்ணையை பாதுகாக்க பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தடுப்பணை கட்ட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான கரும்பு நிலுவை தொகை, ஆலை ஊழியர்களுக்கான சம்பள பாக்கி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

ராணிபேட்டையை அடுத்த கல்மேல்குப்பம், எடப்பாளையம் கிராம பகுதிகளில் காப்பு காட்டில் மான்கள் உள்ளன. தண்ணீர் தேடி மான்கள் வரும்போது அவை உளுந்து, கேழ்வரகு உள்பட பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. இதை தடுக்கவும் பயிர்களுக்கான இழப்பீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருமால்பூர் ஏரி கசக்கால்வாயை தூர் வார வேண்டும். வள்ளுவம்பாக்கம், படியம்பாக்கம், முசிறி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு வேளாண்மை துறை உள்பட கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் தென்னை உள்பட விவசாய பயிர்களில் பூச்சிகளை ஒழிக்க முழுவதுமாக பூச்சி கொல்லிகளை மட்டுமே பயன்படுத்தாமல் மாற்று வழிகளில் பூச்சிகளை அழிப்பது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விளக்க படங்களுடன் செயல்விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்