வருகிற சட்டசபை தேர்தலில் ‘‘தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும்’’ வசந்தகுமார் எம்.பி. பேட்டி
‘‘வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும்‘‘ என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார்.
நெல்லை,
‘‘வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும்‘‘ என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார்.
போலியோ விழிப்புணர்வு சுடர்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையும், பின்னர் அங்கிருந்து காபூல், கராச்சி ஆகிய நகரங்களுக்கு போலியோ விழிப்புணர்வு சுடர் பயணம் செல்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கி நெல்லை வந்த அந்த போலியோ விழிப்புணர்வு சுடர் பயணத்திற்கு நெல்லையில் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–
அமெரிக்க அதிபர் இந்தியா வந்த நேரத்தில் டெல்லியில் கலவரம் நடந்தது நமது நாட்டின் மதிப்பை குறைத்து காட்டுகிறது. எனவே, கலவரம் ஏற்படாமல் மத்திய அரசு பார்த்து இருக்கவேண்டும். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு மக்களை பயமுறுத்தி உள்ளது. டெல்லி கலவரத்தை பாரதீய ஜனதா கட்சியினர்தான் தூண்டிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வெற்றி
காங்கிரஸ் கூட்டணி மராட்டியத்தில் ஆட்சியை பிடித்து உள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறோம். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று உள்ளது. மக்கள் மோடியின் மீது உள்ள வெறுப்பை காட்டி உள்ளனர். வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக மாற்றவேண்டும். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரியில் விளையாட்டு கிராமம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடங்குளம், நெய்வேலி மின் நிலையங்களுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க சட்டம் இயற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.