பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் தொடங்கியது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் தொடங்கியது.
தவக்காலம்
ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று அழைப்பாளர்கள். இந்த ஆண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதன்கிழமையான நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு பவனியின்போது எடுத்து வந்த குருத்தோலையை எரித்த சாம்பலை நெற்றியில் பிஷப் அந்தோணிசாமி சிலுவை அடையாளமாக பூசினார்.
குருத்தோலை ஞாயிறு
தவக்கால நாட்களில் மாலை நேரத்தில் சிறப்பு ஆராதனை நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 5–ந்தேதி குருத்தோலை ஞாயிறு நடக்கிறது. அன்று கிறிஸ்தவர்கள் ஓசனா பாடுவோம் என்ற பாடலை பாடிக்கொண்டு பவனி செல்கிறார்கள். இதைத்தொடர்ந்து 9–ந்தேதி புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. முதியோர் பாதத்தை ஏசு பிரான் கழுவி அவர்களுக்கு உணவு வழங்கியதை நினைவு கூறும் வகையில், பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் பிஷப் அந்தோணிசாமி முதியோர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு உணவு அளிக்கும் வைபவம் நடக்கிறது. 10–ந் தேதி ஏசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 12–ந் தேதி ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.