2018-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடந்த முழு அடைப்பு: இழப்பீட்டை வசூலிக்க கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடகத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-25 22:47 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், காவிரி பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு 3 நாட்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். இதனால் அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது.

இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றது. நேற்று ஐகோர்ட்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கர்நாடக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

வசூலிக்க வேண்டும்

அதாவது, கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது, ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட வேண்டும். அவர் சேத விவரங்களை கணக்கிட்டு, அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர் முழு அடைப்புக்கு காரணமானவர்களை பொறுப்பாளர்களாக்கி அவர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதேபோல் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்த முழு அடைப்பு மற்றும் போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பாளர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்