குள்ளஞ்சாவடி அருகே, அ.தி.மு.க.வினர் இடையே கோ‌‌ஷ்டி மோதல்-5 பேர் காயம் - கார் கண்ணாடி உடைப்பு

குள்ளஞ்சாவடி அருகே அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட கோ‌‌ஷ்டி மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.;

Update: 2020-02-25 22:30 GMT
குள்ளஞ்சாவடி,

குள்ளஞ்சாவடி அருகே உள்ள கோ.சத்திரத்தில் ஊராட்சி செயலாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் ஏற்பாட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது ஆதரவாளரான முத்துகிரு‌‌ஷ்ணாபுரம் அ.தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவர் ராதாகிரு‌‌ஷ்ணனிடம் செல்போனில் பேசி கண்டித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காரில் கோ.சத்திரத்துக்கு வந்தார். அங்கு அவருக்கும் ராதாகிரு‌‌ஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு கோ‌‌ஷ்டியினரும் மோதிக்கொண்டனர். இதில் ராதாகிரு‌‌ஷ்ணன்(வயது36) மற்றும் அவரது தரப்பை சேர்ந்த தமிழக காவலன்(28), தனசேகரன்(37), சவுந்திரராஜன்(47) ஆகியோரும் எதிர்கோ‌‌ஷ்டியில் செல்வமும்(49) காயம் அடைந்தனர். மேலும் அவரது கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த கோ‌‌ஷ்டி மோதலில் காயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதற்கிடையே செல்வத்தின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதையும், அவர் தாக்கப்பட்டடதையும் அறிந்த முத்துகிரு‌‌ஷ்ணாபுரத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் கோ.சத்திரம் குறுக்கு ரோட்டில் நேற்று மாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்