காதலி பேச மறுத்ததால் விரக்தி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர். புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவருடைய தம்பி காண்டீபன் (வயது 26). இவர் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் காண்டீபனும், அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். தினமும் அவர்கள் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். நாளடைவில் காண்டீபனின் செயல்பாடுகளில் அந்த இளம்பெண் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த இளம்பெண் அவருடன் பேச மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த காண்டீபன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காண்டீபன், அருகில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு தூங்க செல்வதாக கவுதமிடம் கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது, காண்டீபன் வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் காண்டீபனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.