தனுஷ்கோடி அருகே கடல் சீற்றம்: மேலும் ஒரு படகு மூழ்கியது; 6 மீனவர்கள் மீட்பு
தனுஷ்கோடி அருகே கடல் சீற்றத்தால் படகு மூழ்கியது. கடலில் விழுந்து தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் குமார் (வயது 30), ராமன் (25), மாரிமுத்து (33), ஆண்டி (55), ரவி (46), முத்துராமலிங்கம் (30) ஆகிய 6 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீசிய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்தால் படகின் பலகை உடைந்து கடல் நீர் படகினுள் வர தொடங்கியது. சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்கியதுடன், அதில் இருந்த 6 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அப்போது அருகே மீன்பிடித்து கொண்டிருந்த, ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு நேற்று காலை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
ஏற்கனவே ராமேசுவரத்தை சேர்ந்த எடிசன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் சீற்றத்தால் மூழ்கி அதில் இருந்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.