இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் சிக்கியது
இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள 1¼ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 21) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 334 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
மேலும், சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாலமன் பாரீஸ் (25) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
1 கிலோ தங்கம் பறிமுதல்
இதையடுத்து, கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த பாத்திமா பாஸ்மியா (39) என்பவரின் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 485 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
ஆக மொத்தம் 3 பேரிடம் இருந்து ரூ.54 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 229 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.