கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.86¾ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை - அதிகாரி தகவல்
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.86¾ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை அறுவடை செய்து, கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் 1,500-க்கும் அதிகமான தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
அவற்றில் 100 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக 6 ஆயிரத்து 898 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 978 ரூபாய்க்கும், மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,729-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,576-க்கும், ஒரு மூட்டை கம்பு அதிக பட்சமாக ரூ.2,683-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,619-க்கும், கேழ்வரகு ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,950-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,863-க்கும் விற்பனையானது. மேலும் 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மணிலா அதிகபட்சமாக 6 ஆயிரத்து 11 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த தானிய மூட்டைகளை சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். நேற்று முன்தினம் மட்டும் ரூ.86 லட்சத்து 70 ஆயிரத்திற்கு தானியங்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.