ஆண்டிப்பட்டியில், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
ஆண்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க 2 இடங்களை பார்வையிட்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி ஆய்வு செய்தார்.
தேனி,
ஆண்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு உள்ளிட்ட கோர்ட்டுகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் கோர்ட்டு அமைப்பதற்காக தற்போது 2 இடங்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆண்டிப்பட்டி உழவர் சந்தை பகுதியிலும், க.விலக்கில் இருந்து வருசநாடு செல்லும் சாலையோரமும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த இரு இடங்களையும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த இடங்கள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் அவர் கலந்தாலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது தேனி மாவட்ட ஆய்வு நீதிபதி சுப்பிரமணியன், மாவட்ட செசன்சு நீதிபதி (கூடுதல் பொறுப்பு) அப்துல்காதர், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் நீதிபதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.