திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறி, கூலி தொழிலாளியிடம் ரூ.1½ லட்சம் மோசடி - ஜோதிடர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறி கூலி தொழிலாளியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-02-25 22:30 GMT
கோவை,

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 36). இவர் தியாகி குமரன் மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய பெற்றோர், மூத்த சகோதரர் இறந்து விட்டனர். 2-வது சகோதரருக்கு திருமணம் ஆகவில்லை. 3-வது சகோதரருக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். ரங்கராஜிக்கு திருமணம் ஆகாததால், தனது உறவினர் மற்றும் நண்பர்களிடம் பெண் பார்க்க சொன்னார். அதன்படி கோவை அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்த ஜோதிடரான முருகன் என்கிற முருகானந்தம், ரங்கராஜிக்கு அறிமுகம் ஆனார். அவர், தனக்கு தெரிந்த நண்பர்களின் குடும்பத்தில் ஏராளமான பெண்கள் உள்ளனர், அதை தேர்வு செய்து திருமணம் நடத்தி வைக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

அத்துடன் அவர் ரங்கராஜிடம் ஜாதகம் மற்றும் ரூ.1½ லட்சம் வாங்கிச்சென்றார். பின்னர் ஜாதகத்தில் தோஷம் அதிகமாக இருக்கிறது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றுக்கூறி உள்ளார். சில நாட்கள் கழித்து ஜோதிடரிடம், பெண்ணின் புகைப்படத்தை காண்பிக்கும்படி ரங்கராஜ் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் உங்களுக்கு, ஒரு பெண் பார்த்து வைத்துள்ளேன். ஆனால் உங்கள் ஜாதகத்தில் இன்னும் தோஷம் தீரவில்லை. அதற்கு சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். தோஷம் முடிந்ததும் அந்த பெண்ணை கண்டிப்பாக உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி உள்ளார்.

பலமுறை கேட்டும் அவர் இதே பதிலை கூறியதால், ரங்கராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோதிடரிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டார். அதற்கு அவர் விரைவில் தந்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். ஆனாலும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடர் தனது மகன் சபரிஷ் மற்றும் உறவினர்கள் நந்தகோபால், கார்த்திக் ஆகியோருடன் கோவை வந்தார். அப்போது அவரிடம் தனது பணத்தை ரங்கராஜ் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிடர் உள்பட 4 பேரும் சேர்ந்து ரங்கராஜை சரமாரியாக தாக்கியதுடன், அவருடைய செல்போனையும் பறித்து உள்ளனர். இது குறித்து ரங்கராஜ் கடைவீதி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் மோசடி, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் முருகனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சபரிஷ், நந்தகோபால், கார்த்திக் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்