வார்டு மறு வரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்
ராணிப்பேட்டையில் வார்டு மறு வரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விவரம் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கூறினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது :–
வேப்பூரை தனி ஒன்றிய கவுன்சிலர் வார்டு பகுதியாக அறிவிக்க வேண்டும், மாங்குப்பத்தை நந்தியாலம் ஊராட்சியில் இணைக்க வேண்டும், பெரும்புலிபாக்கத்தை நெமிலி ஒன்றியத்திலேயே நீடிக்க வேண்டும், பாராஞ்சியில் 5 ஆயிரத்திற்கு மேல் வாக்காளர்கள் உள்ளதால் அதை தனி ஒன்றிய வார்டு பகுதியாக அறிவிக்க வேண்டும். கொடைக்கல் பகுதியை புலிவலத்தில் சேர்க்கக்கூடாது, அக்கச்சிகுப்பத்திற்கு வெகு தூரத்தில் அய்பேடு உள்ளது இதை தவிர்த்து அருகாமையில் உள்ள பரவத்தூரை சேர்க்க வேண்டும்.
நெமிலி ஒன்றியத்தில் முன்பு இருந்தது போலவே 23 ஒன்றிய வார்டு பகுதியாக நெமிலி ஒன்றியத்தை நீடிக்க செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் பேசினர். அனைவரின் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிகளின் செயலாளர் சிவராம்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செந்தில்வேல் மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளின் ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிசெயல் அலுவலர்கள் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.