திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 16–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2020-02-25 22:00 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

வெயிலுகந்த அம்மன் கோவில் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 16–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10–ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம் 

அதிகாலை 5.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவில் கோவில் செயல் அலுவலர் அம்ரித், தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், செயல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்