நவிமும்பைைய சேர்ந்த பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர்கள் 4 பேர் சிவசேனாவில் இணைந்தனர்

நவிமும்பை மாநகராட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் 4 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தனர்.;

Update: 2020-02-24 23:46 GMT
மும்பை, 

நவிமும்பை மாநகராட்சிக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் நவிமும்பை பா.ஜனதா மூத்த தலைவர் கணேஷ் நாயக் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளரான சுரேஷ் குல்கர்னி, அவரது மனைவி ராதா குல்கர்னி, சங்கீதா வாஸ்கே, முத்ரிகா காவ்லி ஆகியோர் கடந்த வாரம் தங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் அவர்கள் பா.ஜனதாவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்து உள்ளனர். 4 பேரும் நேற்று முன்தினம் மும்பை பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் வைத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி காவி கயிறை கட்டிவிட்டார். அப்போது தானே பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ராஜன் விச்சாரே எம்.பி. உள்ளிட்ட பலர் இருந்தனர்.

பா.ஜனதாவுக்கு பின்னடைவு

சிவசேனாவில் இணைந்தது குறித்து சுரேஷ் குல்கா்னி கூறுகையில், “எனது பகுதி மக்கள் பா.ஜனதாவில் இருந்து விலகுமாறு கூறினர். எனது பகுதியில் தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்காக தான் பா.ஜனதாவில் இருந்து விலகினேன். எனது பகுதி மக்களுக்கு பா.ஜனதா கொள்கைகள் ஒத்துப்போகவில்லை” என்றார்.

நவிமும்பை மாநகராட்சி தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளநிலையில் பா.ஜனதாவை சேர்ந்த 4 முன்னாள் கவுன்சிலர்கள் சிவசேனாவில் இணைந்துள்ளது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்