செனகல்லில் இருந்து நாடு கடத்தல்: நிழல்உலக தாதா ரவிபூஜாரி பெங்களூரு அழைத்து வரப்பட்டார் காவலில் எடுத்து போலீஸ் தீவிர விசாரணை
செனகல் நாட்டில் கைதான நிழல் உலக தாதா ரவிபூஜாரி நாடு கடத்தப்பட்டு பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் ரவி பூஜாரி. நிழல் உலக தாதாவான இவர் மீது கொலைகள், கொள்ளை வழக்குகளும், அரசியல் கட்சி தலைவர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஏராளமான வழக்குகளும் பதிவாகி உள்ளன. பெங்களூரு, உடுப்பி, மங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்திலும், மராட்டிய மாநிலம் மும்பை, புனே மற்றும் பிற மாநிலங்களிலும் ரவி பூஜாரி மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிபூஜாரி தலைமறைவாக இருந்தார். மேலும் அவர் வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
இதையடுத்து, ரவி பூஜாரியை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டது. ரவி பூஜாரி மீது ரெட் கார்னர் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டு, சர்வதேச அளவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2019) ஜனவரி 19-ந் தேதி செனகல் நாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நிழல் உலக தாதா ரவிபூஜாரியை, அந்த நாட்டு போலீசார் கைது செய்தார்கள். அதாவது இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீசு அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
ரவி பூஜாரி ஒப்படைப்பு
இதுபற்றி கர்நாடக போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, செனகல் நாட்டில் இருந்து ரவிபூஜாரியை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் இருந்ததால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கும் மேலாக இருந்த சட்ட பிரச்சினைகள் மற்றும் ரவிபூஜாரியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது.
இதையடுத்து, ரவிபூஜாரியை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக கர்நாடக மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் செனகல் நாட்டுக்கு சென்றனர். அங்கு செனகல் போலீசாரிடம், ரவிபூஜாரி மீதுள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கர்நாடக போலீசார் வழங்கினார்கள். அதே நேரத்தில் ரவிபூஜாரியை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு செனகல் நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியும் பெறப்பட்டது. பின்னர் கடந்த 22-ந் தேதி ரவி பூஜாரி, கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தார்கள்.
பெங்களூரு அழைத்து வரப்பட்டார்
இந்த நிலையில், செனகல் நாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.40 மணியளவில் ரவிபூஜாரி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். ரவிபூஜாரி அழைத்து வரப்படுவதையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து மடிவாளாவுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, நேற்று காலையில் பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் ரவிபூஜாரி ஆஜர்படுத்தப்பட்டார். அடுத்த மாதம் மார்ச் 9-ந் தேதி வரை ரவிபூஜாரியை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் அவரை, மார்ச் மாதம் 7-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ஜெகதீஷ் அனுமதி வழங்கினார்.
போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து, ரகசிய இடத்தில் வைத்து ரவிபூஜாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் பதிவான வழக்குகள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். யாருக்கெல்லாம் கொலை மிரட்டல் விடுத்தார், ரியல்எஸ்டேட் அதிபர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைதாகி உள்ள ரவிபூஜாரியிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.