எடியூரப்பா ஆட்சி காலத்தை முழுைமயாக நிறைவு செய்வார் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்வார் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சரியான உறவு இல்லை
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மீதமுள்ள ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்வோம். பா.ஜனதாவை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று காங்கிரசை சேர்ந்த சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி. கூறியுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது பற்றி அவர் கூறியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) இடையே சரியான உறவு இல்லை. சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் எங்கள் அரசை ஆதரித்துள்ளனர். அதனால் எடியூரப்பா ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். 15-வது நிதிக்குழு புதிதாக வழிகாட்டுதலை வகுத்துள்ளது. அதனால் கர்நாடகத்திற்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீட்டில் சற்று குறையும் என்று கருதப்படுகிறது.
இளைஞர்களுக்கு வாய்ப்புகள்
இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மத்திய மந்திரிகளுடன் பேசுவார். கர்நாடகத்திற்கு அநீதி ஏற்படாது. அமெரிக்கா என்றால் பெரிய அண்ணன் என்ற காலம் இருந்தது. இப்போது இந்தியாவும் பொருளாதார பலமிக்க நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றபோது, அங்கு அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது.
அதே போல் தற்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மரியாதை வழங்கப்படுகிறது. இதனால் இரு நாடுகள் இடையேயான நல்லுறவு மேலும் வளர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா செல்லும் நமது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.