ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
திருவள்ளூர் அருகே ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
சென்னை பெரம்பூர் முனியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 58). இவர் சென்னை தெற்கு ரெயில்வேயில் சீனியர் பிரிவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். வெங்கடகிருஷ்ணன் கடந்த 1996-ம் ஆண்டு திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தில் 2 ஆயிரத்து 275 சதுர அடி கொண்ட மனைப்பிரிவு இடத்தை விலைக்கு வாங்கினார்.
அதன் தற்போதைய மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்த நிலையில் கடந்த ஆண்டு வெங்கடகிருஷ்ணன் அந்த நிலத்திற்கு வில்லங்கச்சான்று போட்டு பார்த்தார். அப்போது வேறு ஒரு நபர் அதனை போலி ஆவணம் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் அபகரித்து இருப்பது தெரியவந்தது.
ஆள்மாறாட்டம்
இதுகுறித்து வெங்கடகிருஷ்ணன் திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியகுமார், குப்புசாமி, பக்கிரிசாமி, கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த நிலத்தை ஆள்மாறாட்டம் செய்தும், போலி கையொப்பம் செய்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும் மோசடி செய்தது தெரியவந்தது.
2 பேருக்கு வலைவீச்சு
போலீசார் விசாரணையில், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான நாகஜோதி (61) என்பவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று நாகஜோதியை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.