இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்

இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-24 22:00 GMT
கோவில்பட்டி, 

கடந்த 2008-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் குருவிகுளம் யூனியனில் இருந்த இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகள், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. எனினும் அங்கு ஊரக உள்ளாட்சி துறையை தவிர, மற்ற அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதால், அந்த பஞ்சாயத்துகள் தொடர்ந்து குருவிகுளம் யூனியனிலே செயல்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவிகுளம் யூனியன் அலுவலகத்துக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது குருவிகுளம் யூனியன் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

எனவே இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும், அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இளையரசனேந்தல் பிர்கா பகுதி மக்கள் நேற்று தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் தங்களது ஆதார் அட்டைகளை தரையில் விரிக்கப்பட்ட துணியில் போட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவற்றை உதவி கலெக்டரிடம் வழங்க சென்றனர்.

ஆனால் அவர்களிடம் இருந்து ஆதார் அட்டைகளை பெறாமல், கோரிக்கை மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து ஆதார் அட்டைகளுடன் பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்