அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-02-24 21:39 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளரும், ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவருமான லோகிராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். அப்போது ஆண்டிப்பட்டி வைகை அணை சாலைப்பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகளை ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் வழங்கினர். முன்னதாக அரசு மருத்துவமனைகளில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும், பேரூராட்சி வார்டு பகுதிகளிலும் அ.தி.மு.க. கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆண்டிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பிராதுகாரன்பட்டி கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் முத்துவெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து தலைமை தாங்கினார். கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, ராஜேந்திராநகர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்குச்சாமி, சுப்புலட்சுமி கர்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூடலூரில் அ.தி.மு.க. நகர செயலாளர் அருண்குமார் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நகரில் உள்ள கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கூடலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கன்னிகாளிபுரம் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்து, அதற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நகர செயலாளர் அருண்குமார் அன்னதானம் வழங்கினார்.

இந்த விழாவில் நகர அவைத்தலைவர் துரை, மாவட்ட பொருளாளர் சோலைராஜ், துணைச்செயலாளர் பாலைராஜா, பொருளாளர் நடராஜன், மாணவரணி நகர செயலாளர் பூபேஸ் குப்தா, முன்னாள் நகர இளைஞர் பாசறை செயலாளர் திருவாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடமலைக்குண்டு அருகே சிதம்பரவிலக்கு கிராமத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர் தலைமை தாங்கி, முதியோர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் உணவு வழங்கினார். மேலும் முதியோர் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு இயக்குனர் பாலசுப்பிரமணியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செந்தட்டிக்காளை, கடமலை-மயிலை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கம்பத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் நகர செயலாளர் ஜெகதீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சையதுகான், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், முன்னாள் எம்.பி. பார்த்திபன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன் ஆகியோர் கலந்துகொண்டு உள்நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்களை வழங்கினர். இதில் மகப்பேறு டாக்டர் பர்வீன் பேகம், தலைமை செவிலியர் லைலா, அ.தி.மு.க. அவைத்தலைவர் காந்தி, துணைச் செயலாளர் ஆசிக், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் நகர செயலாளர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முடிவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், உ.அம்மாபட்டி, மேலச்சிந்தலைச்சேரி உள்ளிட்ட ஊர்களில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலாளர் அழகுராஜா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத்தொடர்ந்து அணைப்பட்டி ஊராட்சி பகுதியில் ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்