மறையூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஜோதிடர் குத்திக் கொலை சாக்குமூட்டையில் பிணம் வீச்சு; நண்பர் உள்பட 2 பேர் கைது

மறையூரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஜோதிடரை கத்தியால் குத்திக் கொலை செய்து பிணம் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டது. இது தொடர்பாக அவரது நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-24 23:15 GMT
மறையூர்,

இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த மறையூர் பாபு நகர் மின்சார அலுவலகத்தின் பின்புறம் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை வீசப்பட்டு கிடந்தது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு ஒரு முதியவரின் பிணம் கத்திக்குத்து காயங்களுடன் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மது, மூணாறு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டவர் மறையூர் பாபு நகரை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் உஷாவின் தந்தையான மாரியப்பன் (வயது 70) என்பதும், அவர் ஜோதிடம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

மாரியப்பன் ஜோதிடம் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சென்று இருந்தார். பின்னர் அங்கிருந்து மகள் உஷாவிடம் உடனே மறையூர் திரும்புவதாக செல்போனில் பேசி உள்ளார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் மறையூர் வந்த மாரியப்பன் தனது வீட்டுக்கு வராமல் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான அன்பழகன்(66) வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாரியப்பன், அன்பழகன் மற்றும் அன்பழகன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எரிமேலி பகுதியை சேர்ந்த தச்சுத்தொழிலாளியான மிதுன் (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். இந்தநிலையில் நள்ளிரவில் மதுபோதையில் மிதுன், மாரியப்பனிடம் மேலும் மது வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மாரியப்பன் பணம் தர முடியாது என கூறினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மிதுன் கத்தியால் சரமாரியாக மாரியப்பனை குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் மிதுனும், அன்பழகனும் சேர்ந்து மாரியப்பனின் உடலை சாக்குமூட்டையில் கட்டி சுமந்து சென்று பாபுநகர் மின்சார அலுவலகத்தின் பின்புறம் வீசி சென்று உள்ளனர். இவ்வாறு தகவல்கள் வெளியானது.

இதையடுத்து மறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனையும், மிதுனையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்