கணவர் கண்முன்னே பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி பெண் தலை நசுங்கி பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2020-02-24 22:45 GMT
சென்னை, 

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது மனைவி தாட்சாயிணியுடன் (40) மோட்டார் சைக்கிளில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே புதுவாயல் என்ற பகுதியில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்த போது, அதே திசையில் செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பின்னால் பலமாக மோதியது.

தலை நசுங்கி பலி

இதில் நிலைத்தடுமாறிய சரவணனும், தாட்சாயிணியும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த லாரி, தாட்சாயிணியின் தலை மீது ஏறி இறங்கியதில், தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் கண்முன்னே மனைவி துடிதுடித்து இறந்ததை கண்ட சரவணன் கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன், கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்