ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்; அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருப்பத்தூரில் பெட்ரோல் ஆட்டோ மீண்டும் விடக்கோரி ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் கே.சி.வீரமணியை முற்றுகையிட்டும் மறியலில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பொதுமக்கள் மற்றும் திருப்பத்தூர் வர்த்தக பிரமுகர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி சாலையில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தி கொள்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 5–ந்தேதி முதல் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை ரோடு வழியாக ஆட்டோக்கள் உள்ளே வராமல் மாற்று வழியாக செல்ல கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்களும், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல் ஆட்டோ டிரைவர்கள் தாங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்கள் கூறும் இடத்தில் இறக்கி விட்டு வருகிறோம். நாங்கள் வழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது இல்லை. எனவே எங்களுக்கு கிருஷ்ணகிரி, வாணியம்பாடி சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் சிவன்அருள், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் குழு அமைத்து உள்ளோம். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மீண்டும் சாலையில் ஆட்டோக்கள் அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் பெட்ரோல் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிக்க வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வருகை தந்தபோது ஆட்டோ டிரைவர்கள் அவரை முற்றுகையிட்டு பெட்ரோல் ஆட்டோக்களுக்கு மீண்டும் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறினார்கள்.
அவர்களின் கோரிக்கைகளை அமைச்சர் கே.சி.வீரமணி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கூறினார்.
அவர் சென்ற பிறகு மீண்டும் ஆட்டோ டிரைவர்கள் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், ஆட்டோ டிரைவர்கள் கவுரவ தலைவர் டி.பி.எஸ். ராஜா ஆகியோர் தலைமையில் 100–க்கும் மேற்பட்டோர் பழைய பஸ் நிலையம் அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் (பொறுப்பு) மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வாணியம்பாடி – கிருஷ்ணகிரி மெயின் ரோடு வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தொடர்ந்து 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.