கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி காமராஜர் சாலை அருகே வசித்து வருபவர் திருவண்ணாமலை. இவர், இரும்பு பீரோ தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி ராஜேஸ்வரியுடன் (வயது 45) மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில் திண்டுக்கல்-மதுரை சாலையில் வெள்ளோடு பிரிவு அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள், திடீரென ராஜேஸ்வரி அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்தனர்.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் திருவண்ணாமலையும், ராஜேஸ்வரியும் கீழே விழுந்தனர். திருவண்ணாமலை சுதாரித்து எழுவதற்குள் மர்மநபர்கள் மின்னல்வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததில் ராஜேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.