உளுந்தூர்பேட்டை அருகே, வாகன விபத்தில் முதியவர் சாவு - 8 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே வாகன விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

Update: 2020-02-23 21:45 GMT
உளுந்தூர்பேட்டை,

அரியலூர் மாவட்டம் பலூர் கிராமத்தை சேர்ந்தவர் டோமினிக். டிரைவர். இவர் அரியலூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் டோமினிக்கின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் அந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி மறுபுறம் உள்ள சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது டோமினிக் கார் மோதியது.

இந்த விபத்தில் சென்னையில் இருந்து காரில் வந்த மவுலிவாக்கத்தை சேர்ந்த வேணுநாளையபெருமாள் (வயது 62) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் டோமினிக், அவருடன் காரில் வந்த பலூர் கிராமத்தை சேர்ந்த பரத், மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை கார்த்திக், வடகுறும்பூர் சங்கர் மற்றும் விபத்தில் இறந்த வேணுநாளையபெருமாளுடன் சென்னையில் இருந்து காரில் வந்த மீனு உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்