உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் கோவில், மாசிமக தேர் திருவிழாவில் பட்டாசு வெடிக்கக்கூடாது - போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவுறுத்தல்

உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் கோவில் மாசிமக தேர் திருவிழாவின் போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்று போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-23 22:00 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் பிரசித்திபெற்ற திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக தேர் திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடைபெறும். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலை விகித்தார். கூட்டத்தில் அனைத்து சமூக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு கூறும்போது, தேரோட்டம் நடைபெறும் நான்கு ரதவீதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். திருவிழா காலங்களில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மசூதி மற்றும் தேவாலயங்களின் முன்பு மண்டகப்படி ஊர்வலம் வரும்போது இடையூறு ஏற்படுத்தாமல் செல்ல வேண்டும். திருவிழாவின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டகப்படிதாரர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் விழாவை முடித்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்